ஆக்கப்படவோ அழிகப்படவோ எந்த தருணத்திலும் அனுமதிக்காமல் ஒன்றுலிருந்து மற்றொன்றாக ஆகும் அல்லது ஆக்கும் அனுமதியை மட்டுமே தரும் ‘ஆற்றலை’போல உங்கள் கற்பித்தல் ஆற்றலானது இந்த சமுதாயத்தை புரட்டிபோடும் நெம்புகோலாகட்டும், சமதர்ம சமுதாயத்தை கட்டியெழுப்பும் ஒரு கல்வி புரட்சியாளானாக, பழமைக்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி அஞ்சாது போர்புரியும் ஒரு போர்வீரனாக மாணவர்களை மாற்றட்டும். பழைய கதைகளையும் கற்பனைகளையும் நங்கூரம் பாய்ச்சி இதற்குமேல் நகராமல் கட்டட்டும்.
மதிப்பெண்களை மனதில் வைத்து புத்தகத்தை மனனம் செய்யும் உயிரற்ற ஒரு பதிவு கருவியாக இல்லாமல், புத்தக கருத்துகளை உயிர் நீராய் பருகசெய்து தானே சிந்திக்கும் ஆற்றல் படைத்த ஒரு அசைக்க முடியாத ஒப்பற்ற ஆலவிருட்சமாய் எதிர்கால என் தமிழ் சந்ததியை மாற்றுங்கள் என நானும், எனக்குள்ளும் கல்வியிணூடாக ஒரு ஆளுமையை ஏற்படுத்தி தந்த அற்புத ஆசியர்களை நினைவில் வைத்து உங்களின் பாதங்களில் மன்றாடுகிறேன்.
அவனுக்கு மதிப்பெண் மீனை பிடித்து தரவேண்டிய அவசியம் இல்லையாதலால் கல்வி வலையை வைத்து சிந்தனை மீன்களை தானே பிடிக்க கற்று கொடுத்தால் மட்டுமே ஆசிரியராக வெற்றியடைந்தவராவீர்கள்.
உயிரை கூட்டி உரக்க கத்தினாலும் அறையை விட்டு வெளியே வராத குரலைகொண்ட ஆசிரியரல்லாத எனக்கு, மெல்லிய குரலிணூடாகவே ஒரு இளம் சமுதாயத்துடன், ஒரு புது தலைமுறையுடன் அசாதாரணமாக உரையாடும் ஆசியர்கள்மீது வெளிகாட்டிக்கொள்ளப்படாத பொறாமை எப்போதுமே உள்ளது. என்னால் இழுக்க முடியாத ஒரு தேரினை கட்டியிழுக்கும் சர்வவல்லமை படைத்த ஒரு சக மனிதன் நிச்சயமாக ஒரு ஆசிரியராகதான் இருக்கவேண்டும்.
கட்டி எழுப்பவேண்டிய தன்னம்பிக்கையும், துணிவும், அறிவாற்றலும், சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்க நமது சமுதாயத்தை கருத்தில் கொள்ளாமல் நாள்தோறும் புதுப்புது சீரழிவுகளால் பாழ்பட்டு பழைய இரும்புகளாய் துருபிடித்து கிடக்கும் நமது இளைய தலைமுறையை தங்களது கல்வியுணூடாக துருநீக்கி, சீர்படுத்தி பதம்செய்து எத்தகைய வைரம்பாய்ந்த மடமை மரத்தையும், சுய சிந்தனை பாதையை அடைத்துநிற்கும் மூடப்பாறைகளையும் அசராது வெட்டிச்சாய்க்கும் அறிவுக் கோடரிகளாக மாற்றவேண்டிய கொல்லனின் பொறுப்பு உங்களுக்கு.
இரும்பை இரும்பாகவே தருவது கொல்லனின் அழகல்ல, அதை உழைப்பு சுத்தியல் துணையுடன் அரி(அறிவு)வாளாக மாற்றித்தாருங்கள், நீங்களும் வாருங்கள் கூடி சமுதாயத்தில் வெற்றிக்கதிரருப்போம்...


கரும்பலகையில் மாவால் எழுதுவது வெறும் எழுத்தல்ல, அது இருளடைந்த ஒரு சமுகத்தின் கரியசாலையில் நீங்கள் வரையும் மாக்கோலம், இருட்டை நீக்க நீங்கள் ஏற்றும் மாவிளக்கு என்பது பெருமிதம்கொள்ளவைக்கிறது.
ஆசிரியர் என்பது தொழில் அல்ல ஒரு பொறுப்பு மிக்க, கண்ணியம் மிக்க, முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டிய கடமையுள்ள பதவி. தலைகுனிந்து நின்ற ஆசிரியர்களை நான் என்றுமே கண்டதில்லை. சூரிய ஆசிரியரினுடாகவே, சுழலும் மாணவ பூமி நாள்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டு துள்ளலோடு சுற்றிவருகிறது. அவர்களின் வழியாகவே வரலாறும் தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது. ஆசிரிய மறைவின்போது மட்டும் வரலாறும் ஒரு நொடி நின்று மௌனம் சொல்லிவிட்டு முன்னகர்கிறது.
மாணவனின் வாழ்கையில் தானும் ஒரு அங்கமாகி, அவனுக்கு அறிவுதந்து, பாதைகாட்டி அவனுடன் சண்டையிட்டு, அன்பை பகிர்ந்து, தன்னை கடந்து முன்னகரும் அவனை பெருமையுடன் பார்த்து, அவனுக்கு அனுபவத்தை தந்து முதுமையாக்கி தான்மட்டும் என்றும் இளமையாகவே உணர்ந்து இளமையாகவே மறைந்து போகும் வரம் இந்த "ஆசிரியம்".
வரம்பெற்ற நீங்கள்
சரியாக பயன்படுத்துவீர்கள் என்ற
நம்பிக்கையுடனும்,
வாழ்த்துகளுடனும்....
சக்திவேல் லோகநாதன்