Monday, February 14, 2011

கேளாக்காதுகள்



உடலுக்கு குளிப்பாட்டி,
நெற்றிக்கு பொட்டிட்டு,
புதிதாய் ஆடையிட்டு
கிடத்தியிருந்தார்கள் என்னை
- அருகில் அமர்ந்தபடி அம்மா
தந்தை வந்தார் "அப்பா" என்றழைத்தார்
"என்ன தூக்கம் இன்னும்" என்றார்
"கண்ணை திறந்து பாரப்பா" என்றார்
"பார்த்துவிட்டு சிரியப்பா" என்றார்
நான் ஒன்றுமே செய்யவில்லை - அவர் சொன்னதை
அன்று எனக்கு முதல் நாள் இவ்வுலகில் !!

காலம் ஓடோடிவிட்டது !!
அழைப்பு வந்தது அலுவலகத்திற்கே

ஓடோடி வந்தேன்
உடலுக்கு குளிப்பாட்டி,
நெற்றிக்கு பொட்டிட்டு,
புதிதாய் ஆடையிட்டு
கிடத்தியிருந்தார்கள் அப்பாவை
- அருகில் அமர்ந்தபடி அம்மா
"அப்பா" என்றழைத்தேன்
"என்ன தூக்கம் இன்னும்" என்றேன்
"கண்ணை திறந்து பாரப்பா" என்றேன்
"பார்த்துவிட்டு சிரியப்பா" என்றேன்
இன்று அவரும் ஒன்றுமே செய்யவில்லை


- சக்திவேல் லோகநாதன்