Sunday, August 1, 2010

அம்முகுட்டிக்கு PART #7




புலம்பல் ..!!
"நான் என்ன செய்ய ?
ஒரு கையால் என்னையும்
மறுகையால் என் அம்மாவையும்
பற்றிக்கொண்டுள்ளார் அப்பா"
புலம்புகிறாயே !
நன்றாக பாரடி - நான்
இரு கைகளாலுமே உன்னைத்தான்
பற்றியிருக்கிறேன் - தெரியவில்லையா உனக்கு ?


கர்வம் .. !
கோடி கோடியாய் பணமும்,
கோட்டை போல வீடும்,
தட்டு தட்டாய் தங்கமும்,
வாசலுக்கு ஒரு காரும்,
கணக்கில்லா தோட்டமும் உள்ளதென்று
சவால் விட்டான் என்னிடம்
"நீ இருகிறாய் என்னிடம்" என்றேன்
வந்த வழியே போய்விட்டான் வாய்மூடி



ஆகவே என்னை ..!!
நீ எழுதும் பென்சிலின்
இரண்டு முனைக்கும் பயங்கரசண்டை !
பஞ்சாயத்துக்கு அழைத்தது என்னை
ஒரு முனை சொன்னது
"கொஞ்சுவதுபோல விரல்பிடித்து எழுதுகிறாள்
ஆக என்னை காதலிக்கிறாள்"
மறு முனை சொன்னது
"எழுதுவதைவிட என்னை செல்லமாய்
உதட்டில் வைத்துகொண்டு இருப்பது அதிகம்
ஆக என்னைத்தான் காதலிக்கிறாள்"
என்ன தீர்ப்பு சொல்லட்டும் ?
என்னைத்தான் காதலிக்கிறேன் என்று
அதனிடம் சொல்லித்தொலையேண்டி !!!



கணக்கு டீச்சர் ..!!
"கணக்கு டீச்சர் ஆவேன்" என்று அடம் பிடிக்கிறாய்,
முக்கோணத்தின் மூன்று குத்துக்கொடுகள்
சந்திக்கும் புள்ளி "சக்தி" என்றாயாமே !
நானும் கூட கேட்பேன்
"பத்து சென்டிமீட்டர் ஆரமுள்ள
அம்மு வார்க்கும் அழகான தோசை போல
ஒரு வட்டம் வரைந்து
அதன் பரப்பளவை காண்க"

அம்முகுட்டிக்கு PART #6


வரவேற்பு ..!!
நீ வந்தது எப்படியோ தெரிந்துவிட்டது
என் வீட்டு கறிவேப்பிலை செடிக்கு
இரண்டு நாட்களாக
மல்லிகை பூ பூக்கிறது அதில்..!


வெள்ளையாடாதடா . .!!
"வெள்ளையாடாதடா"!
நீ ஒரு வார்த்தையில் பேசும்
அதிகபட்ச அழகுடைய வார்த்தை - அல்லது
வாக்கியம் அல்லது கவிதை அல்லது பாடல்.
இதிலேயே காதல் கோபம்,
கருணை அன்பு வெட்கம்
எல்லாவற்றையும் சொல்கிறாயே !
ஒரு வார்த்தையில் கூட
தமிழ் பேசலாம் போலிருக்கிறதே!


சிகிச்சை ..!
காலையில் கேட்டேன்
"ஜுரம் நெருப்பாய் கொதிக்கிறது" என்றாய்
மாலையில் நீயே சொன்னாய்
"எல்லாமே சரியாகிடுசுங்க".
உனக்கு தெரியாதடி - உனக்காக
இங்கு நான் மாத்திரை போட்டுக்கொண்டது !


மறைக்காமல் சொல் ..!
எப்படி விளக்குவதென்று தடுமாறும்போது
"இதான நீ சொல்லவந்தது ? " என்கிறாய்
பெரிய மனுசிபோல .
பக்கம் பக்கமாய் விளக்கிவிட்டு
"என்ன புரிகிறதா?" என்றால்
ஐஸ் தின்று அம்மாவிடம் மாட்டிகொண்ட
குழந்தை போல விழிக்கிறாயே !
நீ உண்மையிலேயே குமரியா
இல்லை இன்னும் குழந்தையா ?
மறைக்காமல் சொல்லடி உண்மையை....


நீயாக நீ ..!!
நானாக நான் இல்லாதபோது
நீயாக நீ வந்தாய்
என்னை காட்டினாய் எனக்கு
நீயார் என்பதைத்தான் மறந்துவிட்டாய் பாவம்!!


திருடர்கள் ஜாக்கிரதை ..!
உன்னை கடக்கும் போதெல்லாம்
மனது தானே சொல்லிகொள்கிறது !

அம்முகுட்டிக்கு PART #5


பக்கத்தில் வந்து ..!!
உனக்கே நியாயமா ?
"போதை பொருள்களை தொடுவதில்லை" என்று
சத்தியம் செய்திருக்கிறேன் அம்மாவிடம்.
நீவேறு பக்கத்தில் பக்கத்தில் வந்து நிற்கிறாயே !!


உருமாற்றம் ..!
"சீ... போ" என்று
எந்த நாய்க்குட்டியையும் துரத்தாதேடி ..
ஒருவேளை உன்னை பார்க்க
நான்கூட அப்படி உருமாறி வரலாம்...


பொல்லாத குழந்தை ..!!
பொல்லாத குழந்தை காதலிப்பவன் மனது,
தாலாட்டும் தாயை தூங்கவைத்து
தான் எப்போதும் விழித்திருக்கிறது ..!


பதங்கமாதல்..!!
பதங்கமாகும் பொருட்கள் ..
ஒன்று கற்பூரம்
இரண்டாவது அவள்
நேரடியாக ஆவியாவது, திரவமாகாமல் ..!

அம்முகுட்டிக்கு PART #4


மனபாரம் ..!
ஒய்யாரமாய் அமர்ந்து
ஒவ்வொரு கல்லாக போடுகிறாயே
இதுஎன்ன குளக்கரையா ?
குழந்தை மனதடி பாவி !
மனபாரம் தாங்கவில்லை - மரியாதையாக
போட்ட கற்களை நீயாகவே எடுத்துவிடு
உள்ளே குதித்தாவது ..!



புதுப்பேனா ..!!
புதிதாய் எந்த பேனா வாங்கினாலும்
எழுதிப்பார்ப்பேன் உன் பெயரை.
சரியாக எழுதவில்லை என்றாலும்கூட
இதுவே பிடிக்கிறது என்று எடுத்துவந்துவிடுவேன்
உன்பெயர் எழுதிய ஒரே காரணத்தால்


அழகும் பேரழகும் ..!
நீ பொட்டு வைப்பதில்லை - அது அழகு
"சீ.. போடா" என்று உச்சந்தலையில் செல்லமாய்
கொட்டு வைக்கிறாயே - அது பேரழகு ..!

அம்முகுட்டிக்கு PART #3


கொலுசு ..!
கட்டிய புடவையோடு
என்னை நம்பிவரும்போதும்
மறக்காமல்
அந்த கொலுசுகளை கொண்டுவந்துவிடடி
உன்னை விட அதுதான்
என்னிடம் அதிகம் பேசுகிறது !!

பூ பிம்பம் ..!
நீ பூவைக்க விரும்புவதில்லை ...
ஆனாலும் நீ கனவில் வந்து சென்றபின்பு
மனதில் நின்ற பிம்பத்திற்கு வைத்துப்பார்த்தேன்.
அடிப்பாவி ! ..
இப்படியே பூச்செடி பக்கம் போகாதேடி
மீதம் உள்ள பூக்களெல்லாம்
"அம்மா! என்னையும் இறக்கிவிடு அவளிடம் போகணும்"
என்று செடியிடம் அடம்பிடிக்கும் ...

அசலும் வட்டியும் ..!
"இதோ தந்துவிடுகிறேன்" என்று வாங்கிபோனாயே
இதோடு வருடம் ஐந்தாகிவிட்டது.
அசலும் அகப்படவில்லை,
வட்டியும் வந்தபாடில்லை
பார்க்கலாம் பார்க்கலாம்
எப்போதான் திருப்பி தருகிறாயென்று
வாங்கிப்போன மனதை !!

அம்முகுட்டிக்கு PART #2


"கூ... கூ"
குயிலோடு பேசுவேனென்று "கூ... கூ" என்கிறாயே
சரியாக பாரடி
உன்னோடு பேசும் ஆசையில்
காகம்தான் அப்படி கூவிக்கொண்டு இருக்கிறது
முகத்தை மறைத்தபடி !


பட்டுப்பூச்சி ..!
புடவை கட்ட தெரியாதாமே உனக்கு ?
கேட்டதற்கு "யாரும் சொல்லிதரவில்லையே" என்கிறாயே
இது உனக்கே நியாயமா,
பட்டுபூச்சி என்ன "டெக்ஸ்டைல் டெக்னாலஜி"யா படிச்சது?

கண்டுபிடிப்பு ..!!
குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் - டார்வின்
மனிதரில் இருந்து பிறந்தவள்தான் தேவதை - சக்தி

தேவதை வீடு ..!!
சந்து பொந்துக்கெல்லாம் பெயர்பலகை
வைக்கிறார்கள், உன்வீட்டு முன் ஒன்று
வைத்தால்தான் என்ன ?
"தேவதை வாழும் வீடு" என்று !

அம்முகுட்டிக்கு PART #1



அள்ளி எடுப்போரிடமெல்லாம்
பால்மடி தேடும்
கண்திறக்கா குழந்தை போல ..
சந்தித்த மனிதரில் எல்லாம்
உன் முகம் தேடினேன்.
எழுதி எழுதிப் பார்த்தாலும்
எழுத்து கூட்டிப் படித்தாலும்
தவறாகவே வருகுதடி உன்பெயர்.
அக்காகிதத்தை,
குப்பையில்போட மனம்வராமல்
சேர்த்து வைப்பதில் வாழ்கிறதடி
நம் காதல் - பிறந்த குழந்தையாய் ..!!


தேவதையும் பேயும் ..!
அம்மு குணமிருந்தால்
பேயும் தேவதைதான்...
இல்லாமல் போனால்
தேவதையும் பேய்தான் போ ...


பொய் ..!
என்ன பைத்தியக்காரத்தனம் ?
இன்று அம்மாவாசையாம் ...
கால்முளைத்த வெள்ளை நிலவாய்
அவள் மொட்டைமாடியில் நிற்பது
அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?


பூப்போட்ட துப்பட்டா ..!
இவ்வளவு நேரமாக இல்லை
இப்போதுதான் இத்தனை நட்சத்திரங்கள்.
புரிந்துவிட்டது !
பூப்போட்ட துப்பட்டாவை எங்கோ
உதறுகிறாள் அவள் !