1
பாப்பாத்தி என்கிற பாப்பா போய்ச்சேர்ந்து விட்டாள்.
பக்கத்து தோட்டத்தில் எலிகளுக்கு வைத்த விஷப்பருக்கைகளை தின்றுவிட்டு தரையெல்லாம் வாந்தியாக தலை சுற்றி சுற்றி கீழே விழுந்த பாப்பாவைப் பார்த்து நாங்கள் கதறியது பார்க்க ஒரு கூட்டம். "இப்படியும் உண்டுமா ?" என்றது .
பூனைகளுக்கும் நமக்கும் சிறு வயசுல இருந்தே ஒரு பரிச்சயம் உண்டு. ஆறாம் வகுப்புபடிக்கும் போது வீட்டுக்கு வந்தவ பாப்பா. தோட்டத்தின் அருகில் வசிக்கும் முத்தாம்மா பாட்டியிடம் நெடுநாட்களாக சொல்லிவைத்து பிறந்து கண்திறந்ததும் ஒரு சிவப்பு வயர்கூடையில் வைத்து எடுத்துவந்தோம் பாப்பாவை. ரொம்ப வருசமா இருந்தா. அப்பப்போ வீட்டுக்கு வரும் முயல் குட்டிகள், கிளிக்குஞ்சுகளையும் கொன்று போட்டாலும் அவள் மீது அதீத பாசம்.
பாப்பா ஒரு குட்டியை ஈணியிருந்தாள். ஒரு மாதம் கழித்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தவசியப்பன் வீட்டிற்கு தத்தாக கொடுத்துவிட்டோம். எப்படி நடந்து என்பதெல்லாம் தெரியாது. மறுநாள் காலையில் வீட்டுவாசலில் குட்டியோடு விளையாடிக்கொண்டு இருந்தாள் பாப்பா.
பெண் நாய்க்குட்டிகளையும், பூனைக்குட்டிகளையும் அப்புறப்படுத்த பலமுறைகள் கையாளப்படுகின்றன. எங்களைப்போல தத்துக்கொடுத்து (சுவீகாரம்) விடுபவர்களும் உண்டு. பாலித்தீன் பைகளில் திணித்து இறுகக்கட்டி ஆற்றோரங்களில் வீசுகிறவர்கள் உண்டு. ஊரைவிட்டு தூரம் தள்ளி நெடுஞ்சாலை ஓரமாக விட்டுவந்து விடுபவர்கள் உண்டு. தண்ணீரற்ற கிணறுகளில் வீசுபவர்களும் உண்டு. பைகளில் வைத்து பக்கத்து நகரத்திற்கு மோர் விற்க போகும் பாட்டிகளிடம் வெள்ளிக்கிழமை நாளாகப்பார்த்து கொடுத்துவிடுபவர்களும் உண்டு. அவர்கள் யார்வீட்டு வாசலிலாவது விட்டுவிட்டு "வெள்ளிகிழமை அதுவுமா வாசல்ல உயிரொன்னு வந்து கத்துதே, எடுத்து பால் வைங்கம்மா புண்ணியம்" என்பார்கள். நாளையிலிருந்து மோரோடுசேர்த்து ரெண்டு ரூபாய்க்கு பாலும் வாங்குவார்கள்
மனிதர்களைப்
போலவே பூனைகளும் கூட வளர வளர நம்மிலிருந்து விலகிப் போய்விடுகின்றன. பக்குவமடைந்த பூனைகளிடம் பழகுவதோ விளையாட எத்தனிப்பதோ கூட சற்று ஆபத்துதான். குட்டியாக இருந்த பாப்பா பெரிய ‘பாப்பா’வான பின்பு மறைந்துபோனாள். முன்பிருந்த குழந்தைத்தனம் இல்லை முறைக்கவும் கூட செய்வாள். ரங்கசாமி வீட்டு வெள்ளைப் பூனையுடன் சுற்றுவதாக ஊருக்குள் ஒரு வதந்தி. அதன் பின் பிறந்தவன்தான் ஊர்சுற்றிவிட்டு வந்த 'டாமு'. வைத்த பெயர் என்னவோ 'டாம்' தான்
அம்மாதான் கூப்பிட ஏதுவாக டாமு என்று மாற்றிவிட்டாள். ராமு என்பதைப்போல டாமு என்பதும்
கூட கூப்பிட சற்று வசதிதான். என்ன சொல்கிறீர்கள் ? பூனைக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்,
முதலில் வைக்கப்பட்ட பெயர் என்னவாக இருக்கும் என்றெல்லாம் யோசிக்கையில் சற்று சுவாரஸ்யம்
வந்துதான் போகிறது. பூனையை 'ஏய் பூனை' என்றோ 'ஏய் கருப்பு சட்ட' என்றோ கூட அழைத்திருக்கலாம்.
பின்னாளில் உயில் எழுதுவதோ வாரிசு பூனைக்கு இனிசியல் போடுவதோ ஒன்றும் கெட்டுவிடாது.
இருந்தாலும் கூட பெயர் இருந்தால் ஒரு 'இது' தானே 'அது'க்குதான்.
அது மட்டுமின்றி பூனை, நாய், பாம்பு, குரங்கு இவற்றிற்கெல்லாம்
இந்த பெயர்கள் தான் வைக்கவேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறதல்லவா ? பூனைகுட்டிக்கு
ரஜினி'யென்றொ ராகுல்'யென்றோ பெயர் வைத்தால்
நன்றாகவா இருக்கும் !. ஊருக்குள் வளர்ந்த நாய்க்குட்டிகள் இரண்டிற்கு மட்டும் சற்று
வித்யாசமாக பெயர் வைத்திருந்தோம் ஒருவன் ‘அசுரன்’ இன்னொருவன் 'ரிக்கி பாண்டிங்'. அதையும்
கூட கிராமத்து பாட்டிகள் 'இக்கி பாண்டி'யாக்கி விட்டார்கள்.
டாமிற்கும் ராஜா சேவலுக்கும்தான் அவ்வப்போது சண்டை ஆரம்பமாகும் மாமியார் மருமகள் சண்டைபோல. பாப்பா ராஜாவைக் கண்டுகொள்வதில்லை
டாமுவால் அப்படியிருக்க
முடியவில்லை. விளையாட நண்பனில்லை என்ற வருத்தத்தை விட சண்டையிட எதிரியில்லை என்ற துக்கம்
மிகக் கொடியது.
"ஆம்பளைக்கு எதுக்குடா
தலைல கொண்ட ? என்னப்பாத்தியா எப்படி மீச ?" என்பதுபோல ராஜாவைப் பார்க்கையில் டாமுக்கோர்
நகைப்பு.
தரையோடு வருடிவரும் ராஜாவின்
வாலிறகை கடித்திழுக்க முயலுவான்.துரத்தலும்
பின்வாங்கலும், எதிர்த்துரத்தலும் நடந்துகொண்டிருப்பதை படிக்கட்டின்மேல் அமர்ந்து பார்த்துக்கொண்டே
இருக்கலாம். துரத்தியடிக்கப்பட்ட டாமு "வீவீல்" என்று கத்தியபடி தடுக்கிவிழுந்து
வீட்டுக்குள் ஓடிவிட்டு வெளிவரும்போது பாப்பாவும் கூட வருவாள். கோபப்பார்வையோடு ராஜாவை
நெருங்கி புலியைப்போல் ஒற்றைக்காலைத் தூக்கி அடிக்க முயலுவாள். பிடரிமுடி நட்டுக்கொண்டு
"கொர்ர்ர்ர்"ரென்று ராஜா பார்க்கையில், விரைத்த காதுகளோடு காவடி முதுகு வளைத்து
நுனிவால்வரை சிலிர்த்த முடிகள் முள்ளாய் நிற்க ஆன்டெனா கம்பிபோல் வாலை நிமிர்த்தி
'கிர்ர்ர்ர்'ரென்று பாப்பா நிற்கையில் யாராக இருந்தாலும் சொல்லதோன்றும் "சபாஷ்,
சரியான போட்டி". தனக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதைப்போல ஒரு
நிஜப் பார்வையாளனாகவே மாறியிருப்பான் டாமு.
2
பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தால் கிணற்றை சுற்றிலும் ஒரு கூட்டம்.
என்ன ? என்ன ? என்ன?
"அட உன் டாமு உள்ள விழுந்துட்டானடா".
கிணற்றை சுற்றி சுற்றி வருகிறாள் பாப்பா. சற்றே தண்ணீருள்ள கிணற்றில்
ஓரத்தில் சேரும் சகதியும் உண்டு அதில் போய் அமர்ந்துகொள்வான் என்ற நம்பிக்கை பயத்தைக்
குறைத்தது. இறங்குவதற்கு யாருமில்லை. கூடையைக் கயிற்றில் கட்டி அதில் பால் கிண்ணமும்
வைத்து நான்குமுறை அனுப்பியாயிற்று, அத்தனையும் தோல்விதான்.
"டாடாடாமூமூமூமூ" என்று அம்மா அழைக்கையில் "ம்ம்ம்ம்மிய்யா"
என்றொரு சப்தம் ஈனஸ்வரத்தில் வந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் நின்று விட்டது.
நேரம் ஆக ஆக டாமு எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை அவ்விருட்டில்.
என்னதா வழி? - ஒரு குரல்
பாப்பா ஒரு சிறு புலிபோல கிணற்றையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறாள்.
"இந்தா இவளப்புடிச்சி உள்ள அனுப்பு, அம்மாவும் புள்ளையும்
எப்படி வராம போறாங்கன்னு பாக்கலாம்" சொல்லிய பெருசு அனுபவ மீசையை முறுக்கியது.
கழுத்தோடு பாப்பாவை கவ்விப்பிடித்து கிணற்றுக்குள் சற்றே தொங்க
விடப்பட்ட கூடையில் வைத்தாயிற்று. பாப்பாவின் நடுக்கம் கூடையிலிருந்து கயிற்றின் வழியே
கைகளில் பாய்கிறது. நாலு கிலோமீட்டர் சென்று மகனை மீட்டவளுக்கு அறுபதடி கிணறு அதீத
பயம். சுற்றி நிற்பவர்கலெல்லாம் எப்போ என்ன செய்வார்கள் என்றே தெரியாத மனிதப் பிறவிகலாயிற்றே,
பயம் நியாயமே.
"மிய்யா..மிய்யா..மிய்யா.." - பாப்பா கதறல் கிணற்று
சுவருகளில் எதிரொலித்தது. உள்ளே ஓரங்களில் கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் உறக்கம்
கலைந்து பதறிப்பறக்கின்றன. இப்போது எல்லா சப்தமும் அடங்கிவிட்டது. ஒரே நிசப்தம், ஒரே
அமைதி.
"என்னப்பா, ரெண்டுகளும் சேத்துல ஏதும் முழுகி போயிடுச்சுங்களா
?"
ஐயோ, அப்படியேதும் இருக்கக்கூடாது, மனம் கதறுகிறது.
"பாப்பா டாமு"
விட்ட கயிற்றை மேலிழுக்கையில் கூடை வந்தது வெருமனாக, ஐந்தாவது
முறையாக. பார்வை வீச்சு தாங்காமல் மீசை பெருசு பின்வாங்கிவிட்டது.
"இனியு நேரமில்ல, டே தம்பி சத்தி"
"அண்ணே"
"உள்ள போயி பாக்கறயா ?, கூடைல விடறோம்"
குபீரென்ற பயம்தான் ஆனாலும் மூளை யோசனையிலிருக்கும்போதே மனம்
சொன்னது "சரிண்ணே, நா போரேன்"
"தீப்பெட்டி எடுத்துக்கோ, உள்ள ஒரே இருட்டு. பயப்படாத நாங்க
மேல இருக்கோம், எதுனா குரல் கொடு".
கூடை மெதுவாக மிக மெதுவாக படிப்படியாக கீழிறங்கியது. மேலிருந்த
வெளிச்ச வட்டம் தொலைவில் தொலைவில் போனது. நடுக்கிணற்றிலேயே கும்மிருட்டு "அய்யோ
மேலிலுங்க” என்று கத்திவிடுவோமென்று முடிவெடுத்து வாயைத் திறக்கையில் கீழிருந்து ஒரு
உயிர்க்குரல், பாப்பாவின் "மிய்யா" குரல்.
ஆகா பாப்பா இருக்கிறாள், உயிரோடுதானிருக்கிறாள்.
"சதக்"கென்று சேற்றில் பாதியிறங்கியது கூடை.கிழக்கு
பக்க மூலையிலிருந்து மீண்டும் சப்தம்.
"சலக்"கென்று தண்ணீரில் கால்வைக்கையிலேயே சொல்லியாயிற்று
"பாப்பா நாதான் பயப்படாதே". அதுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ ?. பல தலைமுறையா
நீங்க இங்கயே இருந்தும்கூட இன்னும் ஏன் தமிழ் கத்துக்கல, கேட்டா இதுகளுக்கு புரியுமா
?. இத்தனை வருசமா என்னோடவே இருக்கயே எங்களோட பாஷையை நீங்க ஏன்டா இன்னும் கத்துக்கலை'னு
இதுக நினைக்குமோ என்னவோ ?
"மிய்யா"
"பாப்பா"
"மிய்யாயாயாவ்"
"டேய் டாமு, எங்கடா
இருக்கீங்க ?"
சட்டைப்பையில் இருந்த தீப்பெட்டி
நினைவிற்கு வர
"சர்க், சர்க், சர்ர்ர்ர்.."
கிணற்றுக்குள் ஒரு வெளிச்ச
வெடி வெடித்ததுபோல பிரகாசம். அடிக்கிணற்றில் அந்தகாரம் சூழ்ந்த தீக்குச்சி வெளிச்சத்தில்
அந்தக் காட்சி.
பாப்பா ஒரு பொறுப்புமிக்க
தாயாக தலையை வெளியே நீட்டி பாதிசேற்றில் புதைந்து படுத்திருந்தாள் குளிரில் நடுங்கியபடி.
வெளித்தெரிந்த ஒற்றைக்காம்பில் டாமு முட்டி முட்டி பாலைக் குடித்துக் கொண்டிருந்தான்,
சேற்றில் நின்றபடி..
எல்லாரையும் போல பாப்பாவும்
போய்ச் சேர்ந்தேவிட்டாள்.
தலைக்கு ஒரு வெற்றிலையை வைத்து வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டோம். எதையும் கண்டுகொள்ளாது அன்றும் விளக்கு வெளிச்சத்திலாடும் நூல்கயிற்றின் நிழலைப்பிடிக்க முயன்று கொண்டிருந்தான் டாமு.
தலைக்கு ஒரு வெற்றிலையை வைத்து வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டோம். எதையும் கண்டுகொள்ளாது அன்றும் விளக்கு வெளிச்சத்திலாடும் நூல்கயிற்றின் நிழலைப்பிடிக்க முயன்று கொண்டிருந்தான் டாமு.

