Monday, November 3, 2014

மியாவ்… (Part 1)

1

பாப்பாத்தி என்கிற பாப்பா போய்ச்சேர்ந்து விட்டாள்.

பக்கத்து தோட்டத்தில் எலிகளுக்கு வைத்த விஷப்பருக்கைகளை தின்றுவிட்டு தரையெல்லாம் வாந்தியாக தலை சுற்றி சுற்றி கீழே விழுந்த பாப்பாவைப் பார்த்து நாங்கள் கதறியது பார்க்க ஒரு கூட்டம். "இப்படியும் உண்டுமா ?" என்றது .

பூனைகளுக்கும் நமக்கும் சிறு வயசுல இருந்தே ஒரு பரிச்சயம் உண்டு. ஆறாம் வகுப்புபடிக்கும் போது வீட்டுக்கு வந்தவ பாப்பா. தோட்டத்தின் அருகில் வசிக்கும் முத்தாம்மா பாட்டியிடம் நெடுநாட்களாக சொல்லிவைத்து பிறந்து கண்திறந்ததும் ஒரு சிவப்பு வயர்கூடையில் வைத்து எடுத்துவந்தோம் பாப்பாவை. ரொம்ப வருசமா இருந்தா. அப்பப்போ வீட்டுக்கு வரும் முயல் குட்டிகள், கிளிக்குஞ்சுகளையும் கொன்று போட்டாலும்  அவள் மீது அதீத பாசம்.  

பாப்பா ஒரு குட்டியை ஈணியிருந்தாள். ஒரு மாதம் கழித்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தவசியப்பன் வீட்டிற்கு தத்தாக கொடுத்துவிட்டோம். எப்படி நடந்து என்பதெல்லாம் தெரியாது. மறுநாள் காலையில் வீட்டுவாசலில் குட்டியோடு விளையாடிக்கொண்டு இருந்தாள் பாப்பா.


பெண் நாய்க்குட்டிகளையும், பூனைக்குட்டிகளையும் அப்புறப்படுத்த பலமுறைகள் கையாளப்படுகின்றன. எங்களைப்போல தத்துக்கொடுத்து (சுவீகாரம்) விடுபவர்களும் உண்டு. பாலித்தீன் பைகளில் திணித்து இறுகக்கட்டி ஆற்றோரங்களில் வீசுகிறவர்கள் உண்டு. ஊரைவிட்டு தூரம் தள்ளி நெடுஞ்சாலை ஓரமாக விட்டுவந்து விடுபவர்கள் உண்டு. தண்ணீரற்ற கிணறுகளில் வீசுபவர்களும் உண்டு. பைகளில் வைத்து பக்கத்து நகரத்திற்கு மோர் விற்க போகும் பாட்டிகளிடம்  வெள்ளிக்கிழமை நாளாகப்பார்த்து கொடுத்துவிடுபவர்களும் உண்டு. அவர்கள் யார்வீட்டு வாசலிலாவது விட்டுவிட்டு "வெள்ளிகிழமை அதுவுமா வாசல்ல உயிரொன்னு வந்து கத்துதே, எடுத்து பால் வைங்கம்மா புண்ணியம்" என்பார்கள். நாளையிலிருந்து மோரோடுசேர்த்து ரெண்டு ரூபாய்க்கு பாலும் வாங்குவார்கள்


மனிதர்களைப் போலவே பூனைகளும் கூட வளர வளர நம்மிலிருந்து விலகிப் போய்விடுகின்றன. பக்குவமடைந்த பூனைகளிடம் பழகுவதோ விளையாட எத்தனிப்பதோ கூட சற்று ஆபத்துதான். குட்டியாக இருந்த பாப்பா பெரியபாப்பா’வான பின்பு மறைந்துபோனாள். முன்பிருந்த குழந்தைத்தனம் இல்லை முறைக்கவும் கூட செய்வாள். ரங்கசாமி வீட்டு வெள்ளைப் பூனையுடன் சுற்றுவதாக ஊருக்குள் ஒரு வதந்தி. அதன் பின் பிறந்தவன்தான் ஊர்சுற்றிவிட்டு வந்த 'டாமு'. வைத்த பெயர் என்னவோ 'டாம்' தான் அம்மாதான் கூப்பிட ஏதுவாக டாமு என்று மாற்றிவிட்டாள். ராமு என்பதைப்போல டாமு என்பதும் கூட கூப்பிட சற்று வசதிதான். என்ன சொல்கிறீர்கள் ? பூனைக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும், முதலில் வைக்கப்பட்ட பெயர் என்னவாக இருக்கும் என்றெல்லாம் யோசிக்கையில் சற்று சுவாரஸ்யம் வந்துதான் போகிறது. பூனையை 'ஏய் பூனை' என்றோ 'ஏய் கருப்பு சட்ட' என்றோ கூட அழைத்திருக்கலாம். பின்னாளில் உயில் எழுதுவதோ வாரிசு பூனைக்கு இனிசியல் போடுவதோ ஒன்றும் கெட்டுவிடாது. இருந்தாலும் கூட பெயர் இருந்தால் ஒரு 'இது' தானே 'அது'க்குதான்.

அது மட்டுமின்றி பூனை, நாய், பாம்பு, குரங்கு இவற்றிற்கெல்லாம் இந்த பெயர்கள் தான் வைக்கவேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறதல்லவா ? பூனைகுட்டிக்கு ரஜினி'யென்றொ  ராகுல்'யென்றோ பெயர் வைத்தால் நன்றாகவா இருக்கும் !. ஊருக்குள் வளர்ந்த நாய்க்குட்டிகள் இரண்டிற்கு மட்டும் சற்று வித்யாசமாக பெயர் வைத்திருந்தோம் ஒருவன் ‘அசுரன்’ இன்னொருவன் 'ரிக்கி பாண்டிங்'. அதையும் கூட கிராமத்து பாட்டிகள் 'இக்கி பாண்டி'யாக்கி விட்டார்கள்.


டாமிற்கும் ராஜா சேவலுக்கும்தான் அவ்வப்போது சண்டை ஆரம்பமாகும் மாமியார் மருமகள் சண்டைபோல. பாப்பா ராஜாவைக் கண்டுகொள்வதில்லை

டாமுவால் அப்படியிருக்க முடியவில்லை. விளையாட நண்பனில்லை என்ற வருத்தத்தை விட சண்டையிட எதிரியில்லை என்ற துக்கம் மிகக் கொடியது.

"ஆம்பளைக்கு எதுக்குடா தலைல கொண்ட ? என்னப்பாத்தியா எப்படி மீச ?" என்பதுபோல ராஜாவைப் பார்க்கையில் டாமுக்கோர் நகைப்பு.

தரையோடு வருடிவரும் ராஜாவின் வாலிறகை கடித்திழுக்க  முயலுவான்.துரத்தலும் பின்வாங்கலும், எதிர்த்துரத்தலும் நடந்துகொண்டிருப்பதை படிக்கட்டின்மேல் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். துரத்தியடிக்கப்பட்ட டாமு "வீவீல்" என்று கத்தியபடி தடுக்கிவிழுந்து வீட்டுக்குள் ஓடிவிட்டு வெளிவரும்போது பாப்பாவும் கூட வருவாள். கோபப்பார்வையோடு ராஜாவை நெருங்கி புலியைப்போல் ஒற்றைக்காலைத் தூக்கி அடிக்க முயலுவாள். பிடரிமுடி நட்டுக்கொண்டு "கொர்ர்ர்ர்"ரென்று ராஜா பார்க்கையில், விரைத்த காதுகளோடு காவடி முதுகு வளைத்து நுனிவால்வரை சிலிர்த்த முடிகள் முள்ளாய் நிற்க ஆன்டெனா கம்பிபோல் வாலை நிமிர்த்தி 'கிர்ர்ர்ர்'ரென்று பாப்பா நிற்கையில் யாராக இருந்தாலும் சொல்லதோன்றும் "சபாஷ், சரியான போட்டி". தனக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதைப்போல ஒரு நிஜப் பார்வையாளனாகவே மாறியிருப்பான் டாமு.



2

பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தால் கிணற்றை சுற்றிலும் ஒரு கூட்டம்.

என்ன ? என்ன ? என்ன?

"அட உன் டாமு உள்ள விழுந்துட்டானடா".

கிணற்றை சுற்றி சுற்றி வருகிறாள் பாப்பா. சற்றே தண்ணீருள்ள கிணற்றில் ஓரத்தில் சேரும் சகதியும் உண்டு அதில் போய் அமர்ந்துகொள்வான் என்ற நம்பிக்கை பயத்தைக் குறைத்தது. இறங்குவதற்கு யாருமில்லை. கூடையைக் கயிற்றில் கட்டி அதில் பால் கிண்ணமும் வைத்து நான்குமுறை அனுப்பியாயிற்று, அத்தனையும் தோல்விதான்.

"டாடாடாமூமூமூமூ" என்று அம்மா அழைக்கையில் "ம்ம்ம்ம்மிய்யா" என்றொரு சப்தம் ஈனஸ்வரத்தில் வந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் நின்று விட்டது. நேரம் ஆக ஆக டாமு எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை அவ்விருட்டில்.

என்னதா வழி? - ஒரு குரல்

பாப்பா ஒரு சிறு புலிபோல கிணற்றையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறாள்.

"இந்தா இவளப்புடிச்சி உள்ள அனுப்பு, அம்மாவும் புள்ளையும் எப்படி வராம போறாங்கன்னு பாக்கலாம்" சொல்லிய பெருசு அனுபவ மீசையை முறுக்கியது.

கழுத்தோடு பாப்பாவை கவ்விப்பிடித்து கிணற்றுக்குள் சற்றே தொங்க விடப்பட்ட கூடையில் வைத்தாயிற்று. பாப்பாவின் நடுக்கம் கூடையிலிருந்து கயிற்றின் வழியே கைகளில் பாய்கிறது. நாலு கிலோமீட்டர் சென்று மகனை மீட்டவளுக்கு அறுபதடி கிணறு அதீத பயம். சுற்றி நிற்பவர்கலெல்லாம் எப்போ என்ன செய்வார்கள் என்றே தெரியாத மனிதப் பிறவிகலாயிற்றே, பயம் நியாயமே.

"மிய்யா..மிய்யா..மிய்யா.." - பாப்பா கதறல் கிணற்று சுவருகளில் எதிரொலித்தது. உள்ளே ஓரங்களில் கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் உறக்கம் கலைந்து பதறிப்பறக்கின்றன. இப்போது எல்லா சப்தமும் அடங்கிவிட்டது. ஒரே நிசப்தம், ஒரே அமைதி.

"என்னப்பா, ரெண்டுகளும் சேத்துல ஏதும் முழுகி போயிடுச்சுங்களா ?"
ஐயோ, அப்படியேதும் இருக்கக்கூடாது, மனம் கதறுகிறது.

"பாப்பா டாமு"

விட்ட கயிற்றை மேலிழுக்கையில் கூடை வந்தது வெருமனாக, ஐந்தாவது முறையாக. பார்வை வீச்சு தாங்காமல் மீசை பெருசு பின்வாங்கிவிட்டது.

"இனியு நேரமில்ல, டே தம்பி சத்தி"


"அண்ணே"

"உள்ள போயி பாக்கறயா ?, கூடைல விடறோம்"

குபீரென்ற பயம்தான் ஆனாலும் மூளை யோசனையிலிருக்கும்போதே மனம் சொன்னது "சரிண்ணே, நா போரேன்"

"தீப்பெட்டி எடுத்துக்கோ, உள்ள ஒரே இருட்டு. பயப்படாத நாங்க மேல இருக்கோம், எதுனா குரல் கொடு".



கூடை மெதுவாக மிக மெதுவாக படிப்படியாக கீழிறங்கியது. மேலிருந்த வெளிச்ச வட்டம் தொலைவில் தொலைவில் போனது. நடுக்கிணற்றிலேயே கும்மிருட்டு "அய்யோ மேலிலுங்க” என்று கத்திவிடுவோமென்று முடிவெடுத்து வாயைத் திறக்கையில் கீழிருந்து ஒரு உயிர்க்குரல், பாப்பாவின் "மிய்யா" குரல்.

ஆகா பாப்பா இருக்கிறாள், உயிரோடுதானிருக்கிறாள்.

"சதக்"கென்று சேற்றில் பாதியிறங்கியது கூடை.கிழக்கு பக்க மூலையிலிருந்து மீண்டும் சப்தம்.

"சலக்"கென்று தண்ணீரில் கால்வைக்கையிலேயே சொல்லியாயிற்று "பாப்பா நாதான் பயப்படாதே". அதுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ ?. பல தலைமுறையா நீங்க இங்கயே இருந்தும்கூட இன்னும் ஏன் தமிழ் கத்துக்கல, கேட்டா இதுகளுக்கு புரியுமா ?. இத்தனை வருசமா என்னோடவே இருக்கயே எங்களோட பாஷையை நீங்க ஏன்டா இன்னும் கத்துக்கலை'னு இதுக நினைக்குமோ என்னவோ ?

"மிய்யா"

"பாப்பா"

"மிய்யாயாயாவ்"
"டேய் டாமு, எங்கடா இருக்கீங்க ?"
சட்டைப்பையில் இருந்த தீப்பெட்டி நினைவிற்கு வர

"சர்க், சர்க், சர்ர்ர்ர்.."

கிணற்றுக்குள் ஒரு வெளிச்ச வெடி வெடித்ததுபோல பிரகாசம். அடிக்கிணற்றில் அந்தகாரம் சூழ்ந்த தீக்குச்சி வெளிச்சத்தில் அந்தக் காட்சி.

பாப்பா ஒரு பொறுப்புமிக்க தாயாக தலையை வெளியே நீட்டி பாதிசேற்றில் புதைந்து படுத்திருந்தாள் குளிரில் நடுங்கியபடி. வெளித்தெரிந்த ஒற்றைக்காம்பில் டாமு முட்டி முட்டி பாலைக் குடித்துக் கொண்டிருந்தான், சேற்றில் நின்றபடி..

எல்லாரையும் போல பாப்பாவும் போய்ச் சேர்ந்தேவிட்டாள். 

தலைக்கு ஒரு வெற்றிலையை வைத்து வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டோம். எதையும் கண்டுகொள்ளாது அன்றும் விளக்கு வெளிச்சத்திலாடும் நூல்கயிற்றின் நிழலைப்பிடிக்க முயன்று கொண்டிருந்தான் டாமு.

மியாவ்... (Part 2)

3

          பெங்களூர் மடிவாலா பூனைகள், பொம்மன ஹள்ளி பூனைகள், ஜெய் நகர், ஜேபி நகர் பூனைகள், சில வருட இடைவெளிக்குப்பின் கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் பூனைகள் சென்னை திருவான்மியூர், அடையார், வேளச்சேரி பூனைகள் எல்லாவற்றையும் பார்த்தாலும் கூட ஒரு பரிச்சயம்  ஏற்படுத்திக்கொள்ள தோன்றவில்லை. எப்போவதாவது பார்க்க நேர்ந்தால் ஒரு "ஹாய்" ஒரு "மியாவ்"வோடு சரி. ரயில் பயணங்களைப்போல எதிர்பார்ப்பில்லாத உறவுகளும் சிநேகங்களும் எப்போதும் நிம்மதி என்பதைக் கற்றாயிற்று.

கிராமத்தில் வெற்றிலை வைத்து புதைக்கப்பட்ட பாப்பாவையும் சில மாதங்களில் சுழன்றடித்த புயல்காற்றில் வேரோடு சாய்ந்த வாதநாராயண மரத்தின் கீழ் நசுங்கி உயிரை விட்ட டாமுவையும் சென்னையில் பார்ப்பேனென்று எதிர்பார்க்கவில்லை.

புதிதாக மாற்றப்பட்ட நுங்கம்பாக்க அலுவலக கீழ்த்தளத்தில் 'பைக் பார்கிங்' அருகிலுள்ள பழைய தட்டு முட்டு சாமான்கள் போட்டுவைக்கும் இடத்தில் ஜீவனம். கருப்பு வெள்ளை பாப்பா, பொறி பொறி டாமு. மூக்குநுனி வெள்ளை பாப்பாவை அடையாளம் காட்டுகிறது.

எப்போதாவது காம்ப்பவுண்டு ஓர மாமர நிழலில் தூங்கிக்கொண்டு இருப்பாள், பார்ப்பேன்..
ஏதாவது வாகனங்களின் கீழே எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பான் டாமு.

எல்லாப்பூனைகளும் ஒன்றுபோலவே யோசிக்கின்றன, பார்க்கின்றன என்று தோன்றுகிறது.

சிறு உயிர்கள் தங்களைப்போன்ற இன்னொன்றின் நினைவூட்டலினூடே காலச்சக்கரத்தினை ஒரு இருபதாண்டுகள் பின்தள்ளுகின்றன. ஒருவித இனம்புரியாத கவலையோடு, இழப்பின் வடுவோடு அவ்வயதைத் திரும்பிப்பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. மனதோரம் ரீங்காரமிடும் நினைவுகள் என்ன கொசுக்களா, சுருள் வைத்து விரட்ட?
என் முகம் இவற்றில் ஏதோனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று பார்த்தேன், இல்லை. ஒரு வாட்ச்மேன் எல்லோரையும் பார்ப்பது போலவே இவையும் என்னைப்பார்க்கின்றன.

இரண்டு கட்டிடங்களில் ஒன்றின் திறந்தவெளி கீழ்த்தளத்தில் காஃபி மேக்கர் இருந்தது. அவ்வப்போது மீதமாகும் பால்தான் பிரதான உணவு. இதில் கிடைக்கும் டீ'கும் காஃபி'கும் சுவை வித்யாசம் தெரியாமல் தலைசுற்றி வெளியிலிருக்கும் மலையாள நாயரின் சுபின் டீக்கடையை நாங்களெல்லாம் அணுகிவிட்டதால் மெஷின் பால்தான் பூனைகளின் வயிட்ற்று காட்டில் மும்மாரி பொழிந்துகொண்டிருந்தது தினமும்.
வாட்ச்மேன் தாத்தா உபயம்.

முட்ட முட்டக் குடித்துவிட்டு பால் போதையில் தரையில்படுத்து அப்படியும் இப்படியுமாக உருண்டுகொண்டிருப்பான். நானிருந்த கட்டிடத்தின் மேல்தளத்திலும் ஒரு கேன்டீன் இருந்தாலும் கூட 'இவர்களைப்' பார்ப்பதற்கே இங்கு அவ்வப்போது வந்து போவதுண்டு. தினமும் பார்ப்பது இரயில் சிநேகம் ஆகாதே.

யாருமற்ற நேரத்தில் சன்னமாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி அழைத்துப்பார்ப்பேன்.

"பாப்பாபாபா".

தலையை தூக்கி சொரணையே இல்லாமல் ஓர் உயிரற்ற பார்வையே வீசிவிட்டு "இவன் வேற..."என்று பழையபடியே தலையை திருப்பி படுத்துக்கொள்வாள். வேறெதுவும் பெயர் வைத்திருக்கிறார்களோ என்னவோ ?

இரண்டு காம்ப்பவுண்டு தள்ளி ஒரு இன்சூரன்ஸ் கம்ப்பெனியிலிருந்து முரட்டுத்தனமான சிடுமூஞ்சிப் பூனை ஒன்று அவ்வப்போது வந்துபோகும். பாப்பாவும் அவ்வாண்பூனையும் சண்டையிடுவதைப் பார்த்திருக்கிறேன். டாமுவோட அப்பாவாக இருக்க ஏராளமான சாத்தியக்கூறுகள்.

4
  
            அமெரிக்க வெள்ளை மாளிகையின் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தட்டு முட்டு சாமான்களுக்குகிடையே ஜாகைசெய்துகொண்டிருக்கும் இரண்டு ஜீவன்களை நேரடியாகத் தாக்கியது அவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ ?

நுங்கம்பாக்கத்தில் பறக்கும் பட்டத்தின் நூல் முனை நியூயார்க் நகரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து ஒவ்வொரு சுண்டிற்கும் சென்னைப் பட்டம் ஒரு சிறு குட்டிக்கரணம் அடிக்கவேண்டியிருந்தது. செலவீனங்களைக் குறைத்தல் (cost cutting) என்ற பெயரில் புதிது புதிதாக தினமும் ஏதாவது நிகழ்ந்து கொண்டிருந்தது. புதிதாக ஆட்சேர்ப்பு நிறுத்தம், பெஞ்ச், வெளியில் போவோரை எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் அனுப்புதல், சம்பள உயர்வு விகிதம் குறைத்தல், ஆட்குறைப்பு எல்லாம் முடிந்த பின்தான் அந்த அறிவிப்பும் வந்தது. இரண்டு கட்டிடங்களையும் இணைக்கப் போகிறார்கள்(merging) என்று. அங்கிருப்பவர்கள் எல்லாம் இங்கு வந்து விடுவார்கள். இரட்டை பராமரிப்பு, இரட்டை வாடகை எல்லாவற்றோடு சேர்த்து   இரட்டை காஃபி மெஷின் எல்லாம் ஒன்றாக்கப்படும் என்று Admin dept'ன் அறிவிப்பு ஒரு மின்னஞ்சலில்.

திங்கட்கிழமை முதல் இந்த காஃபி மெசினும் இருக்காது.

பாப்பா, டாமு கதி ?

பூனைகளை அழைத்து Official'ஆக சொல்லவோ, ஒரு மெயில் அனுப்புவதற்கான தேவையோ யாருக்கும் இல்லாமல் போனது. இப்படியொன்று நடக்கப்போகிறதென்ற மெயில் Copy'யை இவர்களுக்கு கொடுத்தால் புரியுமா ?. 

வயிற்றில் படப்போகும் அடிகள் எதுவுமே தெரியாமல் வழக்கம்போல வெள்ளிகிழமை மாலைநேரம் மரத்தடியில் படுத்துக்கிடந்தார்கள்.

எல்லாம் நடந்து முடிந்தது, நடித்தி முடித்தார்கள்.

கட்டிடமே இல்லாதபோது ஒரு வாட்ச்மன் எதற்கு ?. நிறுத்தப்பட்டார்.

வாட்டர் லைன் துண்டிக்கப்பட்டது. "யாரும் நுழையவோ வாகனங்களை நிறுத்தவோ கூடாது"என்ற பலகை ஆங்கிலத்தில் இரண்டு இடத்தில் முளைத்திருந்தது. பூனைகளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதோடு அவர்களுக்கு வாகனங்களும் இல்லாததால் பாப்பா & டாமுவின் எல்லைதாண்டிய நடமாட்டம் பற்றி Admin Dept பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பழைய கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் 'முன்பு' காஃபி மெசின் இருந்த இடத்தில் வீசிய பால்வாடை நுகர்ந்து இரண்டுநாள் சுற்றி சுற்றி வந்தார்கள். வருவோர் போவோர்களில் வாட்ச்மேன் தாத்தாவைத் தேடிப்பார்த்தார்கள், பின்பு தொலைந்தார்கள் மறைந்தார்கள்.

வெறிச்சோடிப்போன பழைய கட்டிடத்தினைச் சுற்றிலும் குப்பைக்கூளங்களும் மாமர இலைகளும் சேரத்தொடங்கியிருக்கின்றன.
எப்போதாவது கண்ணில் படுகிறார்கள், வாடிய முகத்தோடு வற்றிய வயிற்றோடு.

கிராமத்து பாப்பாவும் டாமுவும் பாடாய்ப் படுத்துகிறார்கள்.

என்னதான் செய்யலாம் இப்போது ?

இன்சூரன்ஸ் கம்பெனி சிடுமூஞ்சியிடம் இவர்களையும் இருவரையும் ஒப்படைக்கலாம்தான், அவனின்  நிலைமை அங்கு என்னவோ !. காஃபி மெஷின் போனதிலிருந்து அவனை இங்கு பார்த்ததே இல்லை. "பாவிப் பயலே இந்த பாவம் உன்ன சும்மா விடாதுடா" என்று ஒரு சாபம் வேண்டுமானால் பார்மல்'ஆக விடலாம். அச்சாபம் அமெரிக்காவை  தாக்கவும் கூட ஒரு வாய்ப்பிருக்கிறது.


Lay-Off'ஆ, உன்னோட Experience'கு இதான் சம்பளமா'னு மனைவி கேட்கிறாளா ? ஆபீஸ் டீ காஃபி பிடிக்கவில்லையா ? மேனேஜர் உர்ர்'ரென்று இருக்கிறாரா ? உட்காருகின்ற Seat  உயரம் சரியில்லையா ?, சனிக்கிழமை ஆபீஸ் வரச்சொல்கிறார்களா ? Production support'ஆ ? இன்னொருவன் வேலையை உன்னை செய்யச் சொல்கிறார்களா ? சிலநேரம் உன் வேலையே உன்னை செய்யச் சொல்கிறார்களா ? உன் இருக்கையின் வாஸ்து சரியில்லையா? லிப்ட்-இல் இருக்கும் மியூசிக் பிடிக்கவில்லையா ? Low level design, High level design, Technical design என்று தொல்லையா ? இப்படியாகவும் இன்னும் பல முக்கிய காரணங்கள் இருப்பினும் JAVA'வோ .NET'ஒ ஒருவார காலம் ஒரு சின்ன Refresh செய்துவிட்டு இன்னொரு நிறுவனத்தின் Interview’ல் அமர்ந்துகொண்டு "நாங்கல்லாம் என்னென்ன செய்யுறோம் தெரியுமில்ல ?” என்கிற தொனியில் கண்களில் பயம்காட்டாமல் சரசரவென “இதுவரை ஐம்பத்துநான்கு சக்கரம் கொண்ட தேரினை ஒற்றை ஆளாய் இழுத்து வருகிறேன், என்னுடைய திறமைக்கும் வலிமைக்கும் நூற்றியெட்டு சக்கரம் கொண்ட தேரினை இழுக்க ஆசைப்படுகிறேன். அந்த பெரும்தேர் உங்கள் நிறுவனத்தின் பார்க்கிங்கில்தான் நிற்கிறதென்று அறிகிறேன்” என்று சந்தேகத்திற்கு இடம் தராவண்ணம் பொய்யும் மெய்யும் கலந்தடித்தோமெனில் பெரும்பாலும் வேலை கிடைத்துதான்விடுகிறது.

“அட உங்களைபோல ஒரு திறம சாலியதாங்க எங்க நிறுவனமும் பலநாளா தேடிக்கிட்டு இருந்தது” என்று சொல்லி உங்களை தேர்வு செய்துவிட்டு, இதுதான் ப்ராஜெக்ட் இதுதான் உங்கவொர்க் என்று maintenance என்ற பெயரில் பழைய சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட சொல்கிறவர்களும் உண்டு, Enhancement என்ற பெயரில் பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசச் சொல்கிறவர்களும் உண்டு.

அப்படியான ஒரு ஏற்பாடு பூனைகளுக்கு இல்லை பாவம்.

தற்போது நாங்கள் இருக்கும் கட்டிடத்தின் மேல்தளத்தில் கூட ஒரு காஃபி மெஷின் இருக்கிறது. தினமும் பால் மீதமாகின்றது. இவர்கள் இருவரையும் இங்குகூட ஜாகைமாற்றிவிடலாம்தான். இதிலொரு சின்ன சிக்கல் என்னவென்றால் Reception ஹாலில் இருந்து Top floor போவதற்குள் மூன்று கதவுகளை Access card வைத்து திறந்தாக வேண்டும். "போனால் போகிறது, இந்த  ஜீவன்களுக்கும்தான் ரெண்டு Access card தாங்களேன்" என்று Admin Dept'அ கேட்டாக்க தருவார்களா ?. "நீங்கள் முதலில் ID card வாங்கிக்கொண்டு வாருங்கள், எங்களுக்கு Employees'கு  மட்டும் தான் கொடுக்கும்படி உத்தரவு" என்று HR Dept பக்கமாக திருப்பிவிடுவார்கள். மனிதர்களையே பூனைகளாக பார்க்கும் HR Dept பூனைகளை என்னவாகப் பார்க்கும்?

இங்கு வேலை செய்யும் சில மனிதப்பூனைகளை விட இந்த நிஜப்பூனைகளால் உங்களுக்கு நன்மையே என்பதை நிரூபித்தாலொழிய வேறு வழியில்லை.

"அங்கே துள்ளிவிளையாடும் எலிகள் விரட்டியடிக்கப்படும், அவ்வப்போது துண்டிக்கப்படும் N/W கேபிள்கள், பழுதுபடும் HUB'களுக்கும் இனி தொல்லையிருக்காது, Business Continuity Management மற்றும் N/W Maintenance Team’களின்  வேலைப்பளுவும் சற்று குறைவதன் மூலம் ஒரு கணிசமான அமெரிக்க டாலர்கள் லாபம்தான் என்பதை HR Dept'கு விளக்கித்தொலைய வேண்டும். "ஐந்தும் ஐந்தும் பத்து" என்று நாம் சொன்னால் "அதெப்படி?"யென்று கேட்கும் HR Dept, "ஐந்தும் ரெண்டும் எட்டு"யென்று Finance Dept சொன்னால் "சரிதான்" என்று கேட்டுக் கொள்ளும் !. 

சொல்லிப்பார்கலாம்தான். என்ன சொல்வார்கள் ? உடனே ஒரு மீட்டிங் Arrange   செய்வார்கள். நம்மை ஒரு அற்பப் பிறவிபோல பார்த்து கண்கள் கூர்ந்து நோக்கி தெளிவாக  மெதுவாக Tell me Mr.சக்திவேல் என்று மிக மிக அன்பாகவும் கனிவாகவும் ஆரம்பித்து "அவ்வளவு அக்கறையெனில் நீங்களே உங்கள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போகலாமே?" என்று சிரித்துக்கொண்டே கேட்ப்பார்கள். என்வீட்டில் எலியும் இல்லை LAN N/W’கும் இல்லை. Wi-Fi'யை எலி கடிக்குமா ?!

எனக்கென்னவோ ஒரு சின்ன டெஸ்ட் வைத்துவிட்டு ஒன்றிரண்டு பூனைகளையும் Recruit செய்தால் கூட ஒன்றும் கெட்டுவிடாதென்றுதான் தோன்றுகிறது. புதிதாக RAT Control Team என்று ஒன்று அமைக்கலாம்.

எப்போதும் கம்ப்யூட்டரிலேயே அமர்ந்திருந்த பிறவிகள்தான் இப்போது பூனைகளாக பிறந்து சுற்றுவதாக ஒரு ஐதீகம். "கம்ப்யூட்டர் பூனைகள்" எலிகளை எப்படி துரத்துவதென்பதைக்கூட கூகுள் செய்துதான் தெரிந்துகொள்கின்றன.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னவர் கூட பூனைகள் பசியால் வாடையில் எதனை அழிக்கவேண்டுமென்று சொல்லாமல் விட்டுவிட்டார்.


5
  
        அவைகளுக்கு Access Card இல்லாமல் போனால்தான் என்ன எனக்கிருக்கிறதே. காலையில் இரண்டு கப் மாலையில் இரண்டு கப் பால் மேல் தளத்திலிருந்து கொண்டுவந்து பக்கத்துக்கு கட்டிடத்தின் பின்புறம் சென்று பைக் பார்கிங்'ல் வைக்கலானேன். டாமுதான் புழுதிபறக்க ஓடிவந்தான். பாப்பா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு வாரத்தில் பாப்பாவும் மெல்ல  மெல்ல அருகில் வர ஆரம்பித்திருந்தாள். டாமு குடித்துமுடிக்கும்வரை நின்றுவிட்டு பின் மீதமிருப்பதை நாம் சற்று நகர்ந்தபின் குடிப்பாள்.
கப் நிறைய்ய பாலெடுத்துக்கொண்டு தனிமையில் சென்று நான் பருகுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சில  நண்பர்கள். இன்னொரு மனிதனுக்கு உதவினாலே புதிது புதிதாக பெயர்வைக்கும் உலகம், இது தெரிந்தால் என்ன சொல்லுமோ ?

PAY SLIP'ல் Deduction segment'ல் இதற்கான பணத்தினை எடுத்துக்கொள்வார்களோ என்று நினைப்பதுண்டு - HR Dept ?!!. விடுமுறை நாட்களில் மட்டும் அவர்களுக்கு உதவுமாறு ஜாதிபெயரை தன்பெயரில் வைத்திருக்கும் பிகாரி வாட்ச்மேனிடம் கேட்டிருக்கிறேன். அவரும் செய்துகொண்டுதான் இருக்கிறார்.

என்னை எளிதாக அடையாளம் கண்டுகொள்கின்றன. வண்டி உள்நுழைந்ததும் டாமு ஓடிவர ஆரம்பித்துவிட்டான். வண்டி நம்பர் தெரியுமோ !.

சில நாட்களில் டாமுவை கையிலெடுத்து முகத்தைப்பார்த்து "என்னடா ராஸ்கல்" என்று கேட்டுவிட்டு வண்டியின் இருக்கையில் சற்றுநேரம் வைத்திருப்பேன். கீழிறக்கிவிடும்வரை போகமாட்டான். என்னைத்தவிர யாரும் அவனை அவ்வளவு எளிதில் பிடித்துவிட முடியாது. பாப்பா எட்டி நின்று எல்லாமும் பார்ப்பாள், அருகில் வருவதில்லை.வைத்த பாலைக் குடித்துவிட்டு Reception hall door வரை பின்னாலேயே வந்து   குரோடன்ஸ் செடிகளுக்குள் புகுந்துகொள்வான்.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவிடும் 'அவர்' இப்பூனைகளை விட்டுவிடுவாரா ?
மத்யானப் பால், மரத்தடி உறக்கம், மாலைநேர விளையாட்டு. உருவத்தில் மெல்ல மெல்ல பழையபடி மாறத்தொடங்கியிருந்தார்கள் ஒட்டிய வயிறுகள் சற்று ஊதிய பலூன் போலானது.

பூரண சந்தோசம், மகிழ்ச்சி.
ஒரு சில மாதங்களுக்குப்பின் நுங்கம்பாக்க பட்டத்தின் நூல் மீண்டுமோர்முறை  நியூயார்க்கிலிருந்து சுண்டிவிடப்பட்டது.

காலையில் சென்று மெயில்பாக்ஸ்'ஐ திறந்தால் முதல் மெயில் Admin Dept'ல் இருந்து. இன்னுமோர் Merge. இந்த முறை நுங்கம்பாக்க மொத்த அலுவலகமும் பெட்டிபடுக்கைகளை கட்டிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுண்ட்ரோடு அலுவலகத்திற்கு போகவேண்டுமாம், வரும் வாரம் முதல் அமல்.


வரும் திங்கட்கிழமை முதல் என்னுடைய Access Card'ம் இந்த கட்டிடத்தில் வேலை செய்யாது, காபி மெஷின்'ம் இருக்காது.




 - சக்திவேல் லோகநாதன்